Thursday, January 11, 2018

தனிவரிகள்



ஜெ

வெண்முரசுக்கு இருக்கும் சிறப்புகளில் முக்கியமானது ஆழமான தனிவரிகள். கவிதை போலவோ தத்துவம்போலவோ தனித்து நிற்பவை. நவீனத்துவ இலக்கியத்தில் இவற்றுக்கு இடமில்லை என்பார்கள். [ஆனால் காஃப்கா காம்யூ சார்த்ரின் பல வரிகள் இப்படிப்பட்டவைதான். ஜே ஜே சிலகுறிப்புகளில் சுந்தர ராமசாமி நிறைய எழுதியிருக்கிறார்] கிளாஸிக்கலான அழகியல் கொண்ட படைப்புகளுக்கு இவ்வரிகள் தனிச்சிறப்பு.

ஒட்டுமொத்தத்தின் பிரிக்கமுடியாதபகுதியாகவும் இவ்வரிகள் உள்ளன. இவற்றைச் சொல்பவரின் மனநிலையை அவை காட்டுகின்றன. ஆனால் கிருஷ்ணன் சொல்லும்போது மட்டும் admonition ஆக இல்லாமல் abhorism ஆகவே அவை தெரிகின்றன. இன்றைக்கு வாசித்த வரி இது.

நெறிகளுக்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது. அவை நிகரான பிறிதொரு நெறியால் எதிர்கொள்ளப்படுகையில் பேராற்றல் கொள்கின்றன. மறுக்கப்படுகையில் பேருருக்கொண்டு படைக்கலங்கள் ஏந்துகின்றன. மீறப்பட்டபின் வஞ்சத்தெய்வங்களாக மாறி தொடர்ந்து வருகின்றன.

ஏதேனும் ஒருமுறை வாழ்க்கையில் இம்மாதிரியான சந்தர்ப்பங்களை எதிர்கொள்ள நேரிட்டவர்களுக்கு நெஞ்சிலே அறைந்தது மாதிரி இருக்கும் இந்த வரி. எனக்கு அப்படி ஒரு வாழ்க்கைக்காலகட்டம் இருந்தது. அறச்சங்கடம். அப்புறம் மீறல். அப்புறம் குற்றவுணர்வு. நல்லவேளை காலம் நம்மை மீட்டுவிடுகிறது.

என் பெயர் வேண்டாம்


எஸ்.