Sunday, January 7, 2018

வேழாம்பல் தவம்



இனிய ஆசிரியருக்கு,

சென்ற புத்தாண்டு விடுமுறைக்கு அமைதிப் பள்ளத்தாக்கிற்கு சுற்றுலா சென்றிருந்தேன். எங்களுடன் வந்த கேரள வனத்துறை ஓட்டுநர், நாட்டு வேழாம்பல் பறவையை காட்டினார். வேழாம்பல் எனும் சொல் வேழாம்பல் தவம் என்னும் மழைப் பாடலின் முதல் பகுதியையே எனக்கு நினைவூட்டியது. இவை மழைக்காக காத்திருக்கும் அல்லவா என்றேன். அது ஒரு தொன்மம் மட்டுமே என்றார். ஆனால் வேழாம்பல் பறவையைப் பற்றி மற்றுமொரு சுவாரஸ்யமான தகவலைச் சொன்னார். "பெண் பறவை முட்டையிடும் பருவத்தில் ஆண் பறவையுடன் சேர்ந்து பெரிய பொந்தைக் கொண்ட உயர்ந்த மரத்தை தேர்வு செய்து அங்கே தங்கும். அந்தப் பொந்தினுள் பெண் பறவை தங்கியிருக்கும். அந்தப் பொந்து மூடப்பட்டு இரு துளைகள் அதில் இடப்படும். பெண் பறவைக்கு உணவு கொடுக்க மேற்புறம் ஒரு துளை. உள்ளிருக்கும் பறவை தன் கழிவுகளை வெளியேற்ற கீழ்ப்புறம் ஒரு துளை.  குஞ்சுகள் பிறந்து அவை பறக்கும் வரை பெண் பறவை இரை தேடச் செல்வதில்லை. ஆண் பறவை பெண் பறவைக்கும், குஞ்சுகளுக்கும் உணவைக் கொண்டு வந்து தரும். குஞ்சுகள் வளர்ந்து தாமாகப் பறக்க மூன்று மாத காலமாகும். குஞ்சுகள் தாமாகவே பறக்கும் ஆற்றலை பெற்றவுடன் இந்த கூட்டை உடைத்து கொண்டு உள்ளிருந்த பெண் பறவையும் குஞ்சுகளும் வெளி வரும்" என்றார். 

பயணத்திற்குப் பின் மழைப் பாடலின் வேழாம்பல் தவம் பகுதியை மீண்டும் வாசித்தேன். இப்பகுதி 
சத்யவதியின் பெயர் மைந்தர்களான  திருதிராஷ்டிரரும், பாண்டுவும், விதுரரும் இளைஞர்களாக வளர்ந்த பின் சத்யவதி எனும் வேழாம்பல் தாய் பறவை தவத்தை நிறைவு செய்து வென்று செல்ல துடிப்பதாகவே பீஷ்மருடனான அவளது உரையாடல் எனக்குத் தோன்றியது.

“நதிகள் ஜனபதங்களை இணைத்த காலம் முடிந்துவிட்டது. இனி கடலை ஆள்பவர்களே மண்ணை ஆளமுடியும்.” பீஷ்மர் “அன்னையே, நாம் கடலையும் ஆள்வோம்” என்றார். “அதற்கு நாம் அஸ்தினபுரி என்ற இந்த சிறு முட்டைக்குள் குடியிருக்கலாகாது. நமக்குச் சிறகுகள் முளைக்கவேண்டும். நாம் இந்த வெள்ளோட்டை உடைத்துப் பறந்தெழவேண்டும்.”
....
சத்யவதி “இந்த ஷத்ரியர்களின் சில்லறைச் சண்டைகளால் நான் சலித்துவிட்டேன் தேவவிரதா. குரைக்கும் நாய்களை பிடியானை நடத்துவதுபோல இவர்களை நடத்திவந்தேன். ஆனால் இன்று அந்தப் பொறுமையின் எல்லையை கண்டுவிட்டேன். அவர்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்த விரும்புகிறேன். அத்துடன் கங்கைவழி வணிகத்தில் நம்மிடம் முரண்படுவதற்கான துணிவை எவரும் அடையலாகாது என்றும் காட்டவிரும்புகிறேன்” என்றாள்.


நன்றி.
லட்சுமிபதிராஜன்