Friday, February 2, 2018

பானுமதியின் கண்ணீர் (குருதிச்சாரல் 45)



           பானுமதி கண்ணனின் வருகையை ஆவலோடு எதிர் நோக்குபவளாக இல்லை. அரசாணை  மட்டும் இல்லையென்றால் கிருஷ்ணன் திரும்ப நகர் நீங்கும்வரை எங்காவது ஒளிந்துகொண்டிருக்கலாம் என்று நினைத்திருப்பாள் என்று தோன்றுகிறது.  துரியோதனை அவள் விலகி இருந்தாலும் அவள் உள்ளத்தில் இன்னும் அவன்மேலான காதல் அவளுக்கு அப்படியே இருந்தது. அதே நேரத்தில் கிருஷ்ணன் அவளுடைய சிறுபிராயத்து நண்பன். அவனை மனதில் மிகவும் நெருக்கமாக உணர்பவள்.  பாண்டவர் சார்பாக முன்னின்று நிகழ்வுகளை மேற்கொள்ளப்போகிறவன் கிருஷ்ணன் மட்டுமே.   இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது துரியோதனன் கிருஷ்ணன் தரப்புக்கு  எதிர் நிற்பவனாக இருக்கிறான்.   தன் ஆன்மாவில் கரந்த கிருஷ்ணனும் தன் உள்ளத்தை நிறைத்திருக்கும் துரியோதனனும் முரண்பட்டு எதிரெதிர் நிற்பது அவள் மனதை பெரிதும்  பாதிக்கிறது. 


   கண்ணனின் வருகை அவளுக்கு பதட்டத்தை அளிக்கிறது.  அவள் காதல் உள்ளத்திற்கு அவன் எதிரி. அதே நேரத்தில் அவள் ஆன்மாவிற்கு அணுக்கமானவன்.
அசலை அவளைப் பார்த்து “அஞ்சுகிறீர்களா, அக்கை?” என்றாள். “எப்போதும் அவருக்கு அணுக்கமானவள் என்றே உணர்ந்திருக்கிறேன். என் குலத்தார் என்றன்றி அவரை எப்போதும் எண்ணியதில்லை. இன்று முதன்முறையாக மிகத் தொலைவில் இருக்கிறேன் என அறிகிறேன். அதுவே என்னை பதற்றமடைய செய்கிறது” என்றாள்.


அருகிலிருக்கும் அசலைக்கும் தாரைக்கும் இந்த மனச்சங்கடம் இல்லை.  ஏனென்றால் துச்சாதனன் மீது அசலை அவ்வளவு காதல் கொண்டவளாகத் தெரியவில்ல. மேலும் துச்சாதனன் செயல்கள் எல்லாம் துரியோதனனின் ஆணைப்படி நிகழ்பவை. உண்மையில் துச்சாதனன் துரியோதனன் கை ஆயுதம். ஆகவே துச்சாதனன் செய்கைகளுக்கு பொறுப்பேற்கவேண்டியவன் துரியோதனன் மட்டுமே. ஆகவே கிருஷ்ணனின் எதிர் நிற்பவனாக துச்சாதனன் இல்லை. ஆகவே அசலை மனதில் உறுத்தல் ஏதும்  இல்லை. தாரையும் அவள் கணவன் விகர்ணனும் கிருஷ்ணனுக்கு அணுக்கமானவர்கள் ஆகவே கிருஷ்ணனின் வருகை தாரைக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது. ஆனால் கிருஷ்ணன் மேல் காட்டும் ஆர்வம், அவன் வருகையில் மகிழ்வுகொள்வது அவனை தனக்கு அணுக்கமானவனாகக் கருதுவது எல்லாம் தன் கணவனுக்கு எதிரானதாக அமையும் சங்கடம் பானுமதிக்கு இருக்கிறது. துரியோதனன் மேல் கொண்ட காதலுக்கும்  கண்ணன் மேல் இருக்கும் அணுக்கத்திற்கும் இடையில் அவள் மனம் இரு தலைகொள்ளி எறும்புபோல் துடிக்கிறது.  


    பானுமதி கிருஷ்ணனுக்கு ஊர் எல்லையில் அளிக்கும் வரவேற்பு சொற்கள் ஒரு சிறு பெண் பாடம் செய்து ஒப்பிப்பதலைப்போல் உணர்ச்சியற்று இருக்கிறது.


பானுமதி “அஸ்தினபுரிக்கு யாதவகுலத் தலைவரை அரசமுறைப்படி வரவேற்கிறேன். இக்குடிகளும் அரசும் வளம்பெறவும், கொடிவழிகள் செழிக்கவும், மூதாதையர் மகிழவும் தங்கள் வருகை வழிகோல வேண்டுமென்று கோருகிறேன்” என்றாள்.


   தம் உள்ளத்தை பெண்கள் உணர்வதைவிட அதிகம் அறிபவன் கிருஷ்ணன் அல்லவா? அவள் காட்டும் விலக்கத்தை உணர்ந்துகொண்டு அவளின் மொழியிலேயே அவன் பதிலளிக்கிறான். ஆனால் அசலைக்கும்  தாரைக்கும் சேர்த்து சொல்கையில் அவன் பதில் அணுக்கம் நிறைந்ததாக இருக்கிறது.
அசலையும் தாரையும் வணங்கி முகமன் உரைத்தனர். அவர் அவர்களை நோக்கி சிரித்து “கலைமகளும் திருமகளும் மலைமகளும் வந்து வரவேற்க நற்பேறு கொண்டேன்” என்றார். 



காவியங்களில் ஈடுபாடுகொண்ட அசலை கலைமகள், அரசனின் மனைவி  எனவே பானுமதி திருமகள், துணிவும் துடுக்கும் நிறைந்த தாரை மலைமகள் எனக் கொள்வது மிகவும் சரியாக இருக்கிறது. வேடிக்கையாகக்கூட கிருஷ்ணனின் வாயில் வீண்சொல் வராதுபோலும். 



  கிருஷ்ணனின் களங்கமற்ற சிரிப்பு அந்த மங்கையர் மனங்களை நிறைக்கிறது.  குழந்தைபோல் சிரிக்க மனதில்   கர்வம், வஞ்சம், சூழ்ச்சி, இகழ்ச்சி போன்ற மாசுகள் சற்றுகூட இருக்கக்கூடாது.  அந்த மாசற்ற சிரிப்பு அவனை குழந்தையென தோன்ற வைக்கிறது. அவன் உடலில் இளமையை அது தக்க வைக்கிறது.  அடுத்து இவர்களின் உள்ளங்களை அவன் எப்படி அறிகிறான் என்பதை அசலை பானுமதிக்கு உவமையாக கூறுகிறாள்.


பானுமதி “நம்மைப்பற்றி என்ன எண்ணிக்கொண்டு செல்கிறார்?” என்றாள். “அரசி, புரவிகளை பயிற்றுநர் முதலில் ஆள்கிறார்கள். உரிமைகொள்வோர் பிறகு ஆள்கிறார்கள். அணி ஊர்வலங்களில், பெருங்களங்களில், நெடுந்தொலைவுப்பாதைகளில் அது அவர்களை கொண்டு செல்கிறது. ஆனால் இருண்ட பசிய காடு எப்போதும் அதனுள்ளில் நிறைந்திருக்கிறது. ஒரு புல்லின் இலைகொண்டு அது தன் காட்டை உருவாக்கிக்கொள்கிறது என எண்ணுகிறார்” என்றாள்.
  

ஆம் ஒரு குதிரைக்கு பயிற்றுவிப்பவனும் உரிமையாளானும் போன்று  ஒரு பெண்ணுக்கு தந்தையும் கணவனும் நடந்துகொள்கிறார்கள். ஆனால் அவர்கள் உள்ளத்தில் வெளித்தெரியாமல் ஆழத்தில் ஆழ்ந்திருப்பது கிருஷ்ணனுடனான அணுக்கம்.   ஆடைகளின்  அடியில் இருந்து வெளிவரும் ஒரு மயிற்பீலிவழி கிருஷ்ணன் வெளிப்பட்டு  முழுதுமாக  அவர்கள் உள்ளம் நிறைக்கிறான். 
   

பானுமதி இப்போது கிருஷ்ணன் தன் உள்ளத்திலிருந்து அகன்றால் நன்றாக இருக்கும் என விரும்புகிறாள் என நினைக்கிறேன். தன் கணவனின் எதிரி என்று அவன் இருக்கும் நிலையில் அது அவளுக்கு குற்ற மனப்பான்மையை உருவாக்குகிறது.  அவனுடன் பேசுவதற்கு சொற்களை தேடுகிறாள். 


அசலையிடம் தாழ்ந்த குரலில் “அவரிடம் பேசுவதற்கென்ன உள்ளது நமக்கு?” என்றாள். “முறைமைச்சொற்கள். பிறிதொன்றையும் இத்தருணத்தில் நாம் உரைப்பதற்கில்லை” என்றாள் அசலை. பானுமதி புன்னகையுடன் “ஒரு கோணத்தில் நோக்கினால் இதுவரைக்கும் அவருடன் முறைமைச் சொற்களன்றி பிறிதெதையும் நாம் உரைத்ததில்லை என்று தோன்றுகிறது” என்றாள். அசலை “இப்பிறப்பில் இவ்வடிவில் நாம் இவற்றை மட்டுமே உரைக்கவிருக்கிறோம்” என்றாள்.


 தன் அகத்தை இப்போது அவன்முன் திறந்துவைக்க முடியாது.  ஞாயிறு போன்ற பெரும் விண்மீனின் அருகில் வரும்  ஒரு எப்பொருளும்அதன் அபார ஈர்ப்பு சக்தியின் காரணமாக அதனுள் பாய்ந்து அதில் இணைந்துவிட வேண்டும் அல்லது அதை விட்டு விலகி அதை சுழன்று வர வேண்டும். கிருஷ்ணின் ஈர்ப்பும் அதைப் போன்றதே ஒன்று அவணூல் கலந்துவிட வேண்டும் அல்லது அவனை விட்டு விலகி நிற்க வேண்டும்.  தமக்கென உடல்கொண்டு, உறவுகள் கொண்டு அரசி போன்ற போன்ற நிலைகொண்டு இருக்கும் இவர்கள் அவனுடன் அப்படி கலந்துவிட முடியாது.  


     பானுமதி அவனிடம் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு அஸ்தினாபுரி அரசி என்றே தன் பாவனைகளில் காட்டுகிறாள். கிருஷ்ணனும் அவளை அஸ்தினாபுரியின் அரசியென்றே நடத்துகிறான். 


அறைக்குள் நுழைந்ததும் இளைய யாதவர் எழுந்து தலைவணங்கி “அஸ்தினபுரியின் அரசிக்கு வணக்கம்” என்று அமர்வதற்கு பீடத்தை காட்டினார். பானுமதி பீடத்தில் அமர்ந்ததும் தாரை அவள் ஆடை மடிப்புகளை சீரமைத்து குழலை நன்கமைத்தபின் இடப்பக்கமாக நின்றாள். 


   கிருஷ்ணர் அவளிடம் ஏன் இப்படி அஸ்தினாபுரம் அறம்மீறி நடக்கிறது. இந்த அநீதிக்கு அரசியான உன் பதில் என்ன என்பதைப்போன்ற கேள்வியை வைப்பாரோ என்ற அச்சம் பானுமதியில் உள்ளதில் இருக்கிறது. துரியோதனனின் மனைவியாக நாட்டின் அரசியாக  இருக்கும் அவள் இதற்கான பதிலைச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறாள்.  ஆகவே கிருஷ்ணர் எதுவும் கேட்பதற்கு முன்பாகவே பானுமதி தன் இயலாமையை கூறுகிறாள். 


இளைய யாதவர் “நான் தங்களை முன்னரே சந்திக்கவேண்டுமென்று திட்டமிட்டிருந்தேன். எண்ணியவாறே அது அமைந்தது மகிழ்வளிக்கிறது” என்றார். பானுமதி அரைக்கணம் அசலையை நோக்கிவிட்டு “இங்கு என் சொல்லுக்கு எந்த மதிப்பும் இல்லையென்று அறிந்திருப்பீர்கள், யாதவரே” என்றாள்.


  ஆனால் அந்த இக்கட்டுக்கு அவன் பானுமதியை ஆளாக்கவில்லை. அதற்கு மாறாக இம்மூவரும் துரியோதனை எதிர்த்து திரௌபதிக்கு துயிலுரிக்க முயன்ற நிகழ்வில் உதவியதை நினைவுபடுத்துகிறான்.   இந்த அரசியல் சிக்கலில் ஏதும் செய்ய இயலாமல்  தம்மை தாழ்வாக கருதி வருந்திகொண்டிருக்கும் பானுமதியை அது ஆறுதல்படுத்துகிறது.  அதே நேரத்தில் கிருஷ்ணன் நடக்க விருப்பதை பானுமதிக்கு உணர்த்த நினைக்கிறான். அவன் வெளிப்படையாக அஸ்தினாபுரத்திற்கு அழிவு நேரப்போவதைக் கூறுகிறான்.    


இளைய யாதவர் “இங்கு நகர்நுழைந்ததுமே இந்நகர் முற்றிலும் மாறிவிட்டிருப்பதை கண்டேன். இதன் மக்கள் தங்களை முற்றாக நஞ்சுக்கு அளித்துவிட்டிருக்கிறார்கள். பேரழிவுகளுக்கு முன்பு நிகழ்வது அது.



அடுத்து கிருஷ்ணன் அஸ்தினாபுர மக்கள், கணிகர் சகுனி ஆகியோரின் புத்துணர்வைப்பற்றி சொல்கிறார்.  அவன் துரியோதனனைப்பற்றி  பானுமதியின் பொருட்டு சொல்லாது விட்ட சொற்களை தாரை சொல்லிவிடுகிறாள். 



“கணிகரைக் கண்டேன். நோய் அகன்று வலு கொண்டிருக்கிறார். சகுனியும் புத்துடல்கொண்டு எழுந்தவர் போலிருக்கிறார்” என்றார். தாரை “அரசர் மேலும் ஒளிகொண்டிருக்கிறார், அரசே. இளங்கதிரோன் ஏழுபுரவித் தேரில் எழுந்தவர்போல் தோன்றுகிறார். அவரை நோக்கும் விழிகளும் ஒளிகொள்கின்றன” என்றாள். “ஆம், அவ்வாறே ஆகுமென அறிவேன்” என்றார் இளைய யாதவர்.


இது கணிகர் சகுனி துரியோதனன் ஆகியோரை வரப்போகும் பேரழிவுக்கு காரணமாக இருக்கப் போகிறவர்களாகக்  காண்பிக்கிறது. கணிகரும் சகுனியும் துரியோதனன்  பொருட்டே செயல்படுவதால் முழு விளைவுக்கும் பொறுப்பேற்பவனாக துரியோதனன் இருக்கப்போகிறான்.   இனி வரலாறில் அவன் ஒரு எதிர் நாயகன் என பதிவாவது  உறுதியாகிவிடுகிறது. துரியோதனின் இந்த பெரும் வீழ்ச்சி தடுக்கமுடியுமா என்ற சிறு எதிர்பார்ப்பும் கிருஷ்ணனின் சொற்கள் தகர்த்துவிடுகின்றன. இந்த நிதர்சனம் பானுமதியை பெருந்துயரத்தில் ஆழ்த்துகிறது.  இனி பெருகியோடப்போகும் கண்ணீர் ஆற்றின்  முதல் துளிகள் பானுமதியின் கண்களில் இருந்து பெருகுகின்றன.

தண்டபாணி துரைவேல்