Wednesday, February 28, 2018

துரியோதன தர்க்கம் (குருதிச்சாரல் -69)


    

ஒருவர் நம்மிடம் வந்து அதோ பார் ஒரு கொடிய விலங்கு என்று ஒரு கைவிளக்கொளியை பாய்ச்சிக்  காட்டுகிறார்.   குருதி தோய்ந்த  கூரிய உறுதி மிக்க இரு தந்தங்கள் போன்றவை நம் கண்ணில் படுகிறது. உடனே கொன்றுவிடு என்கிறார். ஈட்டி ஒன்றை எறிந்து கொல்கிறோம். ஆனல் அதிக  வெளிச்சம்வந்து முழுமையாக பார்க்கும்போது அது சிறு குழந்தைகளுக்கெல்லாம் அன்னையென பால் சுரந்தளிக்கும் பசுவென்று தெரிகிறது. சிவப்புவண்ணம் பூசப்பட்ட அதன் கொம்புகளைத்தான் நாம் அந்த குறை ஒளியில்  பார்த்தது.  எப்படி இந்தத் தவறு நேர்ந்தது. நாம் பார்த்தது  ஆபத்தான இரு கொம்புகளை.  நமக்கு காட்டியது  பொய்யான காட்சியல்ல. ஆனால் அது முழுமையான காட்சியும் அல்ல.  பகுதி காட்சியின் மூலம் சாதுவான அன்னைப்பசுவை கொடிய விலங்கென அறியும் தவறு நிகழ்கிறது.   இப்படி உண்மையின் ஒரு சிறு பகுதியைக்காட்டுவதன் மூலம் அந்த முழு உண்மைக்கு மாறான ஒன்றை நிறுவும்  தர்க்கத்தை இனி துரியோதன தர்க்கம் என்று  கூறலாம் என நினைக்கிறேன்.   
  
துரியோதனன் கர்ணனிடம் தான் ஷத்திரியப் பேரவையில் குந்தியைப்பற்றி உரைத்த தர்க்கத்தை  மீண்டும் முன் வைக்கிறான். அவன் கூற்றாக வருவது  


“அன்னை என அவர் நடந்துகொள்ளவில்லை. மூன்றாம்குடியில் பிறந்தவர், ஊழ்வழியால் அரசியென்றானதும் அரசநிலைமேல் பெருவிருப்பு கொண்டு அறம் மறந்தார். பெரும்பிழை செய்து பழிகொண்டார். நான் அதை அவையில் சொன்னேன்.” கர்ணன் நடுங்கும் விரல்களை கோத்தான். அவன் உதடுகள் அதிர்ந்துகொண்டிருந்தன. “அங்கரே, நான் கோரியது பாண்டவர்களுக்காகவும்தான். தங்கள் மெய்தந்தை எவரென்று அறிந்துகொள்ளும் உரிமை அவர்களுக்குண்டு. நாளை அவர்கள் அரசர்களென அவையமர்கையில் ஓர் அந்தணர் எழுந்து அவர்களின் குருதி என்ன என்று உசாவினால் எம்மொழி சொல்ல இயலும்?” 
    
அவனுடைய இந்த தர்க்கத்திற்கான பதிலை  இரு விதங்களில் கூறலாம். ஒன்று எல்லாம் அறிந்த வெண்முரசின் வாசகனாக மற்றொன்று ஒரு எளிய அஸ்தினாபுர குடிமகனாக.
  
வாசகனாக நாம் அறிந்தது, பாண்டு குந்தியை வற்புறுத்தி தன் பிள்ளைகளை பெற்றெடுக்கவைத்தான் என்பது. பாண்டு குந்தியின் பாதத்தில் விழுந்து கதறி அழ,  தாய்மை என்ற தெய்வமாக குந்தி உயர்ந்து நின்று அவனுக்கு வரமென அளித்த பிள்ளைகளே பாண்டவர்கள். (கடைசி இரு குழந்தைகளை அவள் மாத்ரியை தாயாக்கி அளிக்கிறாள். )


“பிருதை, நான் உன்னிடம் கேட்கும் அன்பு என்பது ஒரு மைந்தனாக மட்டுமே என்னிடம் வரமுடியும்… என் துணைவியாக வேறெதையும் நீ எனக்கு அளிக்கமுடியாது” என்றான் பாண்டு. குந்தி மாட்டேன் என்பதுபோல தலையை ஆட்டி “அரசே” என ஏதோ சொல்ல வர பாண்டு சட்டென்று குனிந்து அவள் பாதங்களைத் தொட்டான். “கணவனாக நான் ஆணையிடவில்லை பிருதை… வாழ்க்கையில் எதையும் அடையாதவனாக இரக்கிறேன்… இது ஒன்றை எனக்குக்கொடு!” உடைந்து அழுதவளாக குந்தி நிலத்திலமர்ந்து அவன் தலையை தன்மார்பில் அணைத்துக்கொண்டாள்.
    

ஆகையால் ஒரு வெண்முரசின் வாசகனாக நமக்கு  அனைத்து தர்க்கங்களின்படியும் பாண்டவர்கள் பாண்டுவின்   புதல்வர்கள் என்பது உறுதியாகிறது.  இதை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் திருதராஷ்டிரன் பாண்டு மற்றும் விதுரனை,  விசித்திரவீரியனின் புதல்வர்கள் என்று சொல்ல முடியாது. மேலும் அதிகமாக,  இவர்கள் பிறப்பதே விசித்திரவீரியனின் இறப்புக்கு பிறகுதான். ஆகவே, விசித்திரவீரியனின் அங்கீகாரம் இல்லாமல் பிறக்கும் இவர்கள் அவனுக்கு புதல்வர்கள் என ஆவதில் உள்ள தர்க்கநியாயம் பாண்டுவின் புதல்வர்கள்தான் பாண்டவர்கள் என்பதைவிட மிக மிகக்  குறைவானதே.  அப்படியானால் துரியோதனன் தன்னை சத்திர்யன் என்று செறுக்குடன் சொல்லித்திரிவது எல்லாம் பொய்யென ஆகிறது. ஆனால் இவ்வாறு திருதராஷ்டிரன் முதலானோர் பிறந்தது யாரும் அறியாத அரச மறைபொருளாக இருந்திருக்கலாம்.  எனவே இது ஒரு சாதாரண அஸ்தினாபுரி குடிமகனுக்கு தெரியாத உண்மையாக இருக்கலாம். 
   

ஆகையால் இப்போது ஒரு அஸ்தினாபுர குடிமகனாக துரியோதனனின் தர்க்கத்தைப் பார்க்கலாம்.  பாண்டு குருதிவழியில் தந்தையாக இயலாதவன் என்பது அனைவரும் அறிந்ததாக இருந்திருக்குமா?  ஏனென்றால் அரச குமாரர்களின் பலவீனங்கள் வெளியில் அப்படி வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்காது.  ஒருவேளை அப்படியே அனைவரும்  தெரிந்த உண்மை என்றே வைத்துக்கொள்வோம்.   ஒரு நாள் குந்தி தன் கணவன் பாண்டு வனத்தில் மாண்டுவிட்டான். இதோ அவனுடைய ஐந்து பிள்ளைகள் என அஸ்தினாபுரம் நுழைகிறாள்.  அது பாண்டுவின் பிள்ளைகள் என்று அப்போதைய  அஸ்தினாபுரம் மறுசொல் ஏதும் உறைக்காமல் ஏற்றுக்கொள்கிறது.  சத்தியவதி, பீஷ்மர், ஏற்றுக்கொள்கிறார்கள். திருதராஷ்டிரன் பாண்டுவின் மைந்தர்கள் என்று வாரி அனைத்துக்கொகிறான்.  குந்தியின் மீது எப்போதும் ஒவ்வாமையோடு சினம் கொண்டிருக்கும் காந்தார அரசிகள் அவள் கூறுவதை மறுத்து ஒரு சொல் உரைக்கவில்லை. தன் தமக்கை மகன் துரியோதனனின் அரசப் பதவிக்கு  போட்டியாளர்களாக பாண்டவர்கள் மாறுவதற்கான வாய்ப்பிருந்தும் அவனும் ஒரு சொல் ஐயத்தோடு சொல்லவில்லை. அதற்கப்புரம் குடியவை ஒப்புதலோடு  தருமனுக்கு இளவரசுப் பட்டம் வழங்கப்படுகிறது. பின்னர் அவன் இந்திரப்பிரஸ்தத்தில் மன்னாக முடிசூட்டிக்கொள்கிறான்.  அவன் மும்முடிசூடி சத்திராஜித் என்று அமர்ந்து அஸ்வமேத யாகம் செய்கையில் பாரதத்தின் எந்த மன்னர்களும் அவன் பாண்டுவின் உண்மையான புதல்வனா, ஷத்திரியனா என்று கேள்வி எழுப்பவில்லை.  ஆகவே இப்போது துரியோதனன் பாண்டு ஏற்றுக்கொண்டான் என்பதற்கான சாட்சியை அவன் குந்தியிடம் கேட்பதில் என்ன தர்க்கம் இருக்கிறது. அந்தக் கேள்வியை கேட்கையில்  அவன் பீஷ்மர், அவன் தந்தை, தாய், அஸ்தினாபுர குடியவை பாரதத்தின் அனைத்து அரசர்களையும் பொய்யர்களென ஆக்குகிறான். அவன் குந்தியை பழிப்பதோடு அல்லாமல் இவர்கள் அனைவரையும் பழிக்கிறான் என்றுதான் பொருள்.  
  

மற்றொன்று நியோக முறையில் பிறந்த குழந்தையாக இருந்தாலும் அதை தன் பிள்ளை என ஏற்றுக்கொண்ட பிறகு அது எந்த தந்தைக்கு  பிறந்தது என்ற கேள்வி மிகவும் அபத்தமானது. தற்காலத்திலேயே விந்து தானத்தின் வழி பெறப்படும் குழந்தைகளின் உயிரியல் தந்தை யார் என்பது வெளியில் சொல்வது சட்டப்படி தவறென இருக்கிறது. பாண்டு தன் பிள்ளைகள் என ஏற்றுக்கொண்டதை அறிவிக்கும் சாட்சியாக அந்தணர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லை அன்றைய அஸ்தினாபுரம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.   அது ஒற்றர்கள் வழியாக மேலும் உறுதிப்படுத்திக்கொண்டிருக்கும்.  ஆனால் துரியோதனன் அதையெல்லாம் விடுத்து அவர்களின் உயிரியல் தந்தையின் பெயர்களை இப்போது கூறுக எனச் சொல்வது அஸ்தினாபுரத்தை இழிவு செய்வது  அறத்தை இழிவுசெய்வது, இப்படி கீழ்மையாக நடந்துகொள்வதன் மூலமாக அவனையே இழிவுசெய்துகொள்வதாகும்.
    

இப்போது அவன் பூடகமாக் சொல்லவருவது என்னவென்றால் கர்ணன் குந்தியின் மகன், குந்தி அதை வெளிபடையாக ஒத்துக்கொள்ளட்டும் அப்படி ஒத்துக்கொண்டால் கர்ணன் பாண்டவர்களுக்கு மூத்தவன் என ஆகிவிடுவான். அத்தகைய நிலையில் நான் கர்ணனுக்கு முடிசூட்டி அவனை மன்னனாக்குவேன் என்பதுதான். ஆனால் இதில் உள்ள தர்க்கப்பிழை என்னவென்றால் தருமனுக்கு முடியுரிமை குந்தியின் மகன் என்பதால் வருவதல்ல. பாண்டு அவனை மகனென ஏற்றுக்கொண்டதால் வருவது. ஆகவே கர்ணன்,  குந்தியின் தருமன் முதலான ஐந்து புதல்வர்களுக்கு அண்ணன் ஆவானே தவிர பாண்டுவின் மூத்த புதல்வன் என ஆகமாட்டான். ஆகவே அஸ்தினாபுர முடியுரிமையை அப்படி கர்ணனிடம் கொடுத்துவிட முடியாது.   
    

துரியோதனன் பாண்டவர்கள் பாண்டுவின் குருதி வழி பிறக்கவில்ல. அதை  பாண்டு வந்து நேரில் சொல்லவில்லை எனக் கூறுவது ஒரு சிறு பகுதி உண்மையை  கூறி முழு உண்மையை பொய்யென ஆக்குவதாகும். 


தண்டபாணி துரைவேல்