Thursday, February 22, 2018

அலைகளில் திரள்வது -சத்ரியர் நிலை



இனிய ஜெயம் 

இத்தனை பிரும்மாண்டமான நாவல் எத்தனை நேர்த்தியான ஒழுங்குடன் ,அதன் ஒவ்வொரு அலகும் பிறிதொரு அலகுடன் முழுமையாக இணைந்து முயங்கி ,இந்த பெரும் புனைவின் தரிசன ஆழத்துக்கு வளம் சேர்க்கின்றது என்பதை ஒவ்வொரு முறையும் அறிய நேர்கையில் ,ஒரு கணம் உள்ளே உருவாகும் சிலிர்ப்பு ,எந்த இலக்கிய வாசிப்பு அளிக்கும் உவகையை விடவும் மேலான ஒன்றாக இருக்கிறது .

இதோ மழைப்பாடல் துவக்கத்தில் சூதர் பாடலில் வரும் சித்திரம் . துரியன் பேருருவமாக உயர்ந்து அறம் கொல்லும் சத்ரிய சபை  இதுதானே . 

//
பரசுராமன் சென்றடைந்த இடம் அஸ்ருபிந்துபதம் என்றழைக்கப்பட்ட நிலம். அங்கே பளிங்குத்துளிகளே மணலாக மாறி சூரியனின் ஒளியில் கண்கூச மின்னுவதை அவன் கண்டான். அந்நிலம் வெம்மையானது என்று எண்ணி அவன் பாதங்களை எடுத்து வைத்தபோது அவை குளிர்ந்து பனிபோலிருப்பதை உணர்ந்தான்.
அவற்றில் ஒன்றை எடுத்து தன் நெஞ்சோடு சேர்த்து ‘பளிங்குமணிகளே, நீங்கள் எவர் என’ அவன் வினவியபோது அது விம்மியழுதபடி ‘நாங்களெல்லாம் அழியாத கண்ணீர்த்துளிகள்…. மண்ணில் ஷத்ரியர்களின் அநீதியால் வதைக்கப்பட்டவர்களால் உதிர்க்கப்பட்டவர்கள். அவர்களின் அகம் அணையாமல் எங்களுக்கு மீட்பில்லை’ என்றன.
சினத்தால் விரிந்த கண்கள் செவ்வரி ஓட ‘அறத்தைக் காக்கும் ஷத்ரியன் என எவரும் இல்லையா?’ என்றான் பரசுராமன். ‘உத்தமரே, அறம்காக்கும் மன்னர்களெல்லாம் அழிந்துவிட்டனர். மன்னனின் மீட்பென்பது அறத்தால். அறம் திகழவே மக்கள். மக்கள் வாழவே மண். மண் காக்கவே அரசு. அரசை முதன்மையாகக் கொள்ளும் ஷத்ரியன் அறத்தை இழக்கிறான். அறம் மறந்த மன்னனின் அருகமரும் மன்னனும் அறத்தை இழக்கிறான். ஷத்ரியகுலமே பாற்கடல் திரிந்ததுபோல் ஆயிற்று’ என்றது கண்ணீர்த்துளி.//
பெண்களை கவர்ந்து வரும் சத்ரிய கடமை முடித்து ,பெண் சாபம் பெற்று ,சூதர் வசம் இந்த கதைகள் எல்லாம் கேட்டு விட்டே பீஷ்மர் பாரத யாத்திரை கிளம்புகிறார் .
கேட்ட கதை அவர் கண் முன்னால் நிகழ்ந்து அந்த சபையில் அவர் வாளாவிருக்கிறார் .
பரசுராமன் சொன்னது 
// அழியாத துயரே, ஒன்று தெரிந்துகொள். ஆற்றாது அழுத கண்ணீர் யுகயுகங்களை தன்னந்தனியாகக் கடந்துசெல்லும். தனக்கான வாளையும் வஞ்சினத்தையும் அது கண்டடையும்.//

ஆம் அந்த சபையில் துரியன் உள்ளிட்டு அவன் சொல் பின்னால் அமைதி காத்த அத்தனை உலுத்தர்களும் உடல் கிழிந்து ,குருதி சிதறி மடிய வேண்டிவர்களே .  விதி அல்ல .அது நியதி .தெரிந்து தொட்டாலும் தெரியாமல் தொட்டாலும் நெருப்பு சுடும் .இது விதி அல்ல .இயற்க்கையின் நியதி .  அறமும் நெருப்பே .

கடலூர் சீனு