Saturday, February 10, 2018

பீலி



பானுமதியின் ஆமாடப் பெட்டியில் உறையும் மயிற்பீலி அவளுக்கு அவளுடைய அத்தை தந்தது மட்டுமல்ல மூதன்னையர் நிரையிலிருந்து அவளுக்கு வந்து சேர்வது. அம்பை காசி நகரில் இடமின்றி துறந்து வெளியேறுகையில் பின்தொடரும் மூன்று தெய்வங்களில் பொன்னொளி கொண்ட சுவர்ணை அவளுக்கு அளித்த இறுதிப்பரிசு.

//அதை பல்லாயிரம் முறை கற்பனையால் வருடி ஒருமுறைகூட தொடாமல் வைத்திருந்தேன்” என்றாள். “அது வானத்தைப் புணர்ந்து குஞ்சுபோடும் என்று சொன்னபோது நான் நம்பினேன்//
வானத்தைப் புணரும் கனவுகள் கொண்ட பேதைப் பருவத்து தெய்வம் தந்த கொடை அது. 
அதையே பானுமதியின் அத்தை சியாமளை அவளுக்குத் தந்து செல்கிறாள். 


பானுமதி துரியனுடனான முதல் நாள் இரவிலேயே தன் அகத்துறையும் மயிற்பீலி குறித்து அவனிடம் சொல்கிறாள். துவாரகைக்கென கங்கை நீர் கொள்ள வந்த கிருஷ்ணன் அவள் மணந்து கொள்ளவிருக்கும் வேழம் குறித்து சொன்னதை நினைவு கூர்கையில் இதையும் உறைக்கிறாள். தன்னைக் காண எண்ணும் போதெல்லாம் ஒரு மயிற்பீலியை எடுத்துப் பார்க்கச் சொல்கிறார் இளைய யாதவர்.

//அவர் என் மெய்யாசிரியன், என் தந்தை, என் இறைவடிவம்//


பானுமதியின் அகத்துறையும் மயிற்பீலி அவளுக்கு என்னவாக இருந்ததென்று அசலையிடம் சொல்கிறாள் - 


//இம்மாமதத்தோனை அடைந்தமையால் என்னுள் நின்று தருக்கிய ஒரு பெண் இன்றும் அவ்வண்ணமே இருந்துகொண்டிருக்கிறாள். பிறிதொன்று என இங்கே நான் எதையும் உணரவில்லை.இவையனைத்திற்கும் அப்பால் என ஏங்கும் ஆழமொன்றின் துளி அப்பீலி. வானோக்கிய விழி அது. அதைத் துறந்தால் மட்டுமே இது எனக்கு கைகூடுமென்றால் அவ்வாறே ஆகுக// 

அது மண்ணில் பற்றிக் கொண்டவைகளால் கட்டுப்படாத விண்ணோக்கி எழுந்த விழி. அவளது மெய்யாசிரியனின் பார்வை. அவளது தோழனும் தந்தையும் ஆசிரியனும் என்று நிற்கும் அப்பீலிசூடியவனைத் துறப்பது ஒன்றே முற்றிருளைத் தன் வழியெனத் தேர்ந்துவிட்ட தன்னவனுடன் அவள் நிற்க நேரும் பாதை. 

அகத்துள் உறைந்த அறத்தின் குரலை, மெய்யறிவின் தேடலை தன் பெருங்காதலின் பொருட்டு நிகர் வைக்கிறாள். விண்ணுக்கு மண்ணால் நிகர் செய்ய முனைகிறாள். எனில் விண்ணின் எடையால் துலா சரியுமெனில் அவள் சிந்தும் கண்ணீரால் எடையை நிகர் செய்கிறாள்.

இளைய யாதவரை எதிர் கொண்டு அழைக்க அல்ல எதிர் நின்று அழைக்கவே அவள் செல்கிறாள். எனில் அவரது சொற்கள் அவளது முடிவின் முழு எடையை அவளுக்கு உணர்த்தும் நிலையில் அதுவரை இருந்த கட்டுகள் சிதறி கண்ணீர் பெருக்குகிறாள்.

எத்திசை நின்றால் என்ன! மண்ணில்தான் கிழக்கும் மேற்கும், வெளியில் திசைகள் ஏது. இருளில் நின்று ஒளியை எதிர்க்கும் எதுவும் ஒளியையே சென்றடைகின்றன. விண்ணின் விழியான பீலிவிழிக்கு இருளும் ஒளியும் நிகர்தானே.

அன்புடன்,
சுபா