Tuesday, March 20, 2018

சூரிய உற்று நோக்கு மையமும், வேத முடிபு கொள்கையும்


அன்புள்ள அண்ணா,

நேற்று பணி நிமித்தமாக கொடைக்கானல் சென்றிருந்தேன், அதோடு நீண்ட நாள் திட்டமான கோடையின் இரு நூற்றாண்டு பழமையான சூரிய அப்சேர்வேட்ரியையும், பாலமலையின் டால்மன்களையும் மெகா லித்திக் களையும் பார்க்க திட்டம்.

கொடைக்கானலில் 7 தொலை நுண்ணோக்கிகள் , ரேடியோ டெலஸ்கோப்களும் இருக்கிறது, நான் 6" டெலஸ்கோப்பில் சூரிய நடமாட்டத்தை, மாற்றத்தை பார்த்துக்கொண்டிருந்தேன்.24" பெரிய டெலஸ்கோப்பில் பார்க்க வில்லை, அதன் புகைப்படங்களை கணிணி அறையில் பார்த்தோம்.

 அங்கு ஒரு ஜெர்மானிய அமெரிக்கர் பென் , ஹார்வார்ட் பல்கலையில் அறிவியலின் வரலாறு குறித்து ஆராய்பவர் வந்திருந்தார், மதியம் முதல் அவருடன் சூரியனின் ஒளி தெறிப்புகளை , h Alfa வில் பார்த்து கொண்டு இருந்தோம். ஒளிப்பெருக்குகள், கரும்புள்ளிகள், உள் நிகழும் வெளிச்ச வெடிப்புகள் என்று மிகப்பெரிய ஆச்சர்யத்தை , பரவசத்தை அனுபவித்தோம். சூரியனின் வெளிச்ச தெரிப்புகளை அதன் விளைவுகளை 40,000 கிமீ முதல் 1,20,000 கிமீ வரை என்ன வகையில் வெளிச்ச வேறுபாட்டை கொடுக்கிறது என்று பார்த்தோம்.

மாலை சூரியனின் தரிசனத்திற்கு பிறகு பென்னுடன், நிலைய இயக்குனர் எபியோடும் பேசிக்கொண்டிருக்கும்போது தான் பென் னின் ஆராய்ச்சியின் மகத்துவம் புரிந்தது. பென் அறிவியல் உலக வரலாற்றின் ஒரு முக்கியமான நிகழ்வான 1950 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை சொன்னார். உலக அளவில் முக்கியமான விஞ்ஞானிகள், கூடி இனி மனித குலத்திற்காக செய்யும் ஆய்வுகள் ஆராய்ச்சிகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வது என்றும், கண்டு பிடித்த முதல் 6 மாதம் மட்டுமே ஆய்வுகள் , தரவுகள் ரகசியமாக இருக்கும் , பின்னர் அவை அனைத்து விஞ்ஞானிகளின் பார்வைக்கு வைக்கப்படும் என பேசுகிறார்கள். உலக நாடுகள் அனைத்தும் செஞ்சீனா, ரஷ்யா தவிர்த்து ஒப்பு கொள்கிறார்கள். 1954,ல் ஸ்டாலினின் இறப்பிற்கு பின் ரஷ்யாவும் இந்த நிரையில் இணைந்து கொண்டிருக்கிறது.

 அந்த பொழுதில் இதற்காக முயற்சி எடுத்த ப்ரென்ச், ஜெர்மானிய, இந்திய, அமெரிக்க விஞ்ஞானிகள், அறிஞர்கள் இவர்களை பற்றியும் அந்த நிகழ்வு உருக்கொண்ட வரலாறையும் பதிவு செய்து பதிப்பிக்கிறார். 1950 ல் முதலில் இந்த முயற்சி வானியல், இயற்பியல் துறையில் மட்டும் இருந்திருக்கிறது. பின்னர் 1957ல் இது அனைத்து அறிவியல் துறைகளுக்கும் விரிவு படுத்தப்பட்டு சர்வதேச அறிவியல் ஒத்துழைப்பு காங்கிரஸ் ஆக உருவாகிறது.

International council of scientific union , பிறந்த கதையை சொன்னார். இதில் கொடைக்கானல் உற்று நோக்குதல் மையம் முதல் ஒத்துழைப்பு கூட்டத்தில் ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையத்துடனும், பிரான்சின் மையத்துடனும் இணைந்து தன்னிடம் இருந்த நூற்றாண்டு பழமையான சூரிய நகர்வு நிலையை பகிர்ந்து கொள்கிறது. அது ஒரு பொக்கிஷமாக இன்று வரை காக்கப்படுகிறது. 1870 களில் இருந்து இந்த உற்றுனோக்கு மையம் சூரியன் குறித்து ஆய்வு செய்கிறது 150 ஆண்டுகளுக்கு மேலான சூரியனின் நகர்வுகள் மாற்றங்கள், சலனங்கள், வெடிப்புகள், அச்சு மாற்றம் என்று துல்லியமாக பதிந்து அவை அனைத்தும் மூன்று வகையாக, புகைப்படங்கள், டிஜிட்டல், மற்றும் அச்சு வடிவில் பாதுகாக்க படுகிறது. நம் புவியின் ஆகச்சிறந்த பொக்கிஷமாக இது இருக்கிறது. இனி இவர்கள் பிரான்சின் ஆவணங்களையும் இதே போல ஆவணப்படுத்த இருக்கிறார்கள்.


அங்குள்ள 250 ஆண்டுகள் பழமையான நூலகத்தில் சூரியன் பற்றிய அனைத்து ஆய்வுகளும் ஆவணப்படுத்தி காக்கப்படுகிறது. நாங்கள் 1890 களில் மார்ச் மாதத்தில் ஒரு நாளின் சூரிய நகர்வு தரவுகளை பார்த்தோம், பின் 1945 ஜனவரியின் சூரிய நகர்வை இந்தியா,பிரான்ஸ் அதே நாளில் ஜப்பானில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளையும் பார்த்தோம். 1940 கள் வரை கையால் வரையப்பட்ட ஆவணங்களை பார்த்தேன்.

வராக மிஹிரர் பற்றியும், ராம்சே மன்னர்களின் சூரிய ஆர்வம் பற்றியும் கர்ணன் பற்றியும் நான் சென்று வந்த சூரிய ஆலயங்கள் பற்றியும் சூரிய வம்சம் பற்றியும் எடுத்து சொன்னேன். சூரியனின் தொன்மம் சார்ந்த கதைகளை இப்போது தான் கேட்பதாகவும் இது வரலாற்றில் மேலும் சில சுவைகளை சேர்க்கிறது என்றும் சொன்னார்கள். சூரியனுக்கும் , இந்திரனுக்குமான போர்கள், செளரம், நார்வேஜிய தொன்மங்கள், கிரேக்க தொன்மங்களில் சூரியன், இந்திரன், தோர், செமிட்டிக்கில் சூரிய கடவுள், கிரேக்கத்தில் இயற்கை தத்துவவியலாளர்கள் presocratorianகளின் சூரியன் பற்றிய பார்வை தைலீஸ்,
டெமாக்ரடீஸ்,பர்மனைட்ஸ்கள் உள்ளிட்ட. இயற்கையிலாளர்களின் பார்வை, செளரம் என்று  சாயா தேவி எங்களை தழுவி கொள்வது வரை பேசிக்கொண்டிருந்தோம். எனக்கு நேற்றைய வெண்முரசில் கிருஷ்ணன் சொன்னது நினைவுக்கு வந்தது, வேதத்தின் அறிதலை நாம் ஏன் சுருக்க வேண்டும்? என்ற கேள்வியின் விடையை இயல்பாக அறிந்தேன்.

அறிக, ஒரு நாள் வரும். அன்று வேதமுடிபு உலகெலாம் காண எழுந்து நிற்கும். அனலென்றாகி உலகமெய்மைகள் அனைத்தையும் உருக்கி மாசகற்றி ஒளியூட்டி ஒன்றென்றாக்கும். அந்தணரே, பிரித்தகற்றுவதல்ல அதன் நெறி, ஒருங்கிணைப்பதே. வெல்வதல்ல, தழுவுவதே. ஆள்வதல்ல, அனைத்துமாவதே. வேதமுடிபால் தனதல்ல என்று ஒதுக்கப்படும் ஒன்றும் இங்கு இல்லை. நன்றுதீதுக்கு அப்பால் நின்றிருப்பது அது. தானேயாம் என்று தழுவி அமர்ந்து முழுமைகொள்வது. அந்நெறியை யோகம் என்றது என் குருமரபு. அச்சொல்லை இங்கு முன்வைக்கவே அவையெழுந்தேன். யோகத்திலமர்ந்து நான் என்று ஒற்றைச்சொல்லில் உலகே தன்னை உணரும் ஒருநாள். அன்றுதான் முழுதும் வென்றது வேதமுடிபென்று முந்தை முனிவரிடம் சொல்லவியலும் மானுடம்.”

“அதன் தொடக்கத்தை இங்கு நிகழ்த்தவே வந்தேன். முதலில் நாற்றங்காலில் இருந்து அதை பிடுங்கி நடுவோம். கழனிகள் விரிந்துள்ளன பாரதவர்ஷத்தில். கரட்டுநிலங்களும் காடும் விரிந்துள்ளன உலகமெங்கும். இனி இந்நிலத்தில் வேதங்கள் தங்களுக்குள் போரிடா. இனி இங்கு நிகழ்வது முரண்களின் யோகம் மட்டுமே. பல்லாயிரம் கிளைப்பிரிவுகளுக்கு அடியில் தழுவி ஒன்றாகுக வேர்கள்! உங்கள் சொற்கள் ஒன்றாகுக என்று ஆணையிட்ட வேதத்திற்கு ஆமென்று மறுமொழியுரைக்கும் தருணம் எழுந்துள்ளது இன்று” என்றார் இளைய யாதவர்.
இது இன்று மெய்யாக நிகழ்ந்தது, 
மிகவும் நெகிழ்ச்சியான நாள் இன்று.

 மானுட குலத்திற்காக தங்களின் ஒட்டு மொத்த அறிதலையும், அறிவையும் , முன் வைத்து மானுட குலம் தழைக்க மனம் கனிந்த அனைத்து ரிஷிகளையும், குருக்களையும், நவீன அறிவியல் குருமார்களையும், தத்துவ ஆசிரியர்களையும் தாள் பணிகிறேன்.

 ”ஒன்று சேர்ந்து பயணம் செய்யுங்கள். 
சேர்ந்தமர்ந்து விவாதம் செய்யுங்கள்.
உங்கள் மனங்கள் எல்லாம் ஒன்றாகட்டும்,
முன்பு தேவர்கள் ஒன்றாக அவி பங்கிட்டது போல 
ஒன்று கூடி சிந்தியுங்கள்.
உங்கள் சங்கம் ஒற்றுமையுடையதாகட்டும்.
ஒன்றாக பூஜை செய்யுங்கள்,
உங்கள் இலக்கு ஒன்றே ஆகட்டும்.
உங்கள் இதயங்களில் ஒற்றுமை விழைக.
உங்கள் மனங்கள் இணைவதாக
ஒற்றுமையுடன் நலமாக வாழுங்கள்.
ஓம்,அவ்வாறே ஆகுக,ஓம்,ஓம்,ஓம்”

மகத்தான ரிக் வேத ஸ்தோத்திரம்.

அன்புடன்
ராஜமாணிக்கம். வீரா