Tuesday, August 5, 2014

நவீன துரோணர்

அன்புள்ள ஜெயமோகன்,

 ஒரு இடைவெளிக்கு பின் எழுதுகிறேன். ஒவ்வொரு நாளும் படித்து மேலும் மேலும் என்று உள்ளே தள்ள முடியவில்லை என ஒரு மயக்கம்

இந்திர விழா ஒரு ரம்யம். இளமையின் வேகமாய் - மலர்ந்த கனவு போல் நன்கு இருந்தது. பொங்கல் விழா சமயங்களில் பூ நோன்பு என்று என் இளைமையில் கண்ட காட்சி வந்து சென்றது....பெண்கள் காடு மேடு சென்று கூடைகளில் எடுத்து மாலையில் கூட்டமாய் கோவில் செல்கையில் அதில் கை விட்டு அள்ளி வீசும் ஆண்களின் கைகளில் மின்னும் காமத்தின் மெல்லிய ரேகைகள், இந்திர விழாவில் துரத்தும் பெண்களில் கோடுகள் என விரிந்து சென்றது

ஆண்களின் உலகமாய் வண்ணகடல் விரிந்து செல்கிறது. அரச ஆண்கள். தன் வித்தையில் வெல்வேன் என்று அமைதியாக வஞ்சம் ஆழ்ந்து சத்ரியனாக மகனை மாற்றி செல்லும் துரோணர், தன் இடம் எது என தெரிந்த அர்ஜுனன் பீமன், தெரிந்தும் தத்தளிக்கும் கர்ணன், வாழ்வு தந்த இடத்திற்கு தன்னை இணைத்து கொண்ட மனிதர்கள் என செல்கிறது விதியின் ஓடம் வண்ணகடலில்
கர்னனக்கு மோதிரம் யார் தந்தது போன்ற curiosity கேள்விகள் தாண்டி தெரிவது ராதை, குந்தி  போன்ற அனைத்தும் அறிந்த அன்னையர்கள்.

இத்தனை விரிவாக இருந்த வில் கலை இன்று ஒரு விளையாட்டு மட்டும் தானா இல்லை பல இடங்ககளில் அதன் வரலாறு மிச்சம் இருக்கிறதா? வில், வாள், சிலம்பு எல்லாம் சிறுத்து எங்கே எவ்விதம் உள்ளன என நேரில் கண்டதுண்டா?

உங்களின் பயணங்களில் சேர்ந்தபடி செல்லவும், சத்சங்கமாய் நெருங்கவும் ஆசைகள். பார்போம் எவ்விதம் செல்லும் கால மேகங்களின் வான் கோலங்கள். உடல் நலத்தை பேணி கொள்ளவும்

அன்புடன்,

லிங்கராஜ்

அன்புள்ள லிங்கராஜ்,

நடராஜகுருவின் மாணவரான குரு ஃப்ரெடி ஒரு முதன்மையான வில்லாளி. விற்கலையை மேலைமரபில் இருந்து கற்றவர். அதன்பின் இந்திய விற்கலையில்விற்பன்னரானார். விற்கலையை ஆன்மசாதனையாக, அகவிடுதலைக்கான கருவியாக பயிற்றுவித்த ஞானி

ஃப்ரெட்டி வான் போர்ட் [Freddy Van Der Borght (1936 - 2006)] பெல்ஜிய அரசகுடும்பத்தில் பிறந்தவர். நடராஜகுருவை பாரீஸ் சார்போன் பல்கலைகழகத்தில் அறிமுகம் கொண்டுஅவரது மானவரானார். அதன் பின் குரு ஃப்ரெடி என்றே அழைக்கப்பட்டார்

குரு ஃப்ரெடி வில்வித்தையை ஒரு அகப்பயிற்சியாக மாற்றியவர். இந்திய ரானுவத்தின் கமாண்டோக்களுக்கும் பயிற்சி அளித்திருக்கிறார். அவரது குருகுலம் இன்று Guru Freddy Gurukula Nature Awareness & Adventure Academy என்ற பேரில் பெங்களூரில் செயல்படுகிறது. அவரது மாணவர்களில் சிலர் ஊட்டியில் எமரால்ட் அருகே காட்டுக்குள் குடில் அமைத்து வாழ்கிறார்கள். நான் அங்கும் சென்றிருக்கிறேன். 



குரு ஃப்ரெடியை நான் 1997 முதல் பத்துமுறைக்கும் மேல் சந்தித்திருக்கிறேன். அவர் வில்வித்தை பற்றி பேசியதெல்லாமே எனக்கு கவிதையைப்பற்றியதாகவே அன்று தோன்றியது. அதை அவரிடம் சொல்லியிருக்கிறேன். அவர் சிரித்துக்கொண்டு கவிதை என்பது பனிமலைச் சிகரம் மேல் விழும் சூரிய ஒளி என்றார். மண் ஒளியாக ஆகும் தருணம் மட்டும்தான் அது. ஒளியல்ல

அவர் சொன்ன எல்லா வரிகளையும் நான் நினைவுகூர்வதை வெண்முரசு எழுதும்போதுதான் உணர்ந்தேன். பலவகையிலும் குரு ஃப்ரெடியின் வரிகளை வெண்முரசில் வரும் துரோணரில் காணலாம். துரோணரின் ஆளுமையில், தோற்றத்தில்கூட குரு ஃப்ரெடி உள்ளே வந்திருக்கிறார். முழுமையாகவே அவரை ஒரு நவீனயுக துரோணர் என்று சொல்லமுடியும்

மகாபாரதத்தில் நான் முற்றிலும் அறியாத எவரைப்பற்றியும் எழுதவில்லை என்றே தோன்றுகிறது.. அனைவரும் வேறுவேறு வடிவில் இங்குதான் இருக்கிறார்கள்.

ஜெ 


http://www.fipps.org/index.html