Saturday, April 21, 2018

குருதிச் சாரல் மற்றும் இமைக்கணம்



அன்புள்ள ஜெ 

உங்கள் கையெழுத்து இடப் பட்ட வெண்முரசு - நீர்க்கோலங்கள் கிடைக்கப் பெற்றேன். நன்றி. உங்களுடைய அத்தனை அலுவல்களிடையே நேரம் எடுத்துக் கொண்டு கையெழுத்திடுவதை  மிக நெகிழ்வான அந்தரங்கமான நட்பாக ஒவ்வொரு முறையும் உணர்கிறேன்.  இந்த முறை, என் மனைவி ரஞ்சனியும் அதையே சொன்னாள். மீண்டும் நன்றி 

குருதிச் சாரலில் - போர் நிறுத்த நடக்கும் முயற்சிகள் - அமைதி காக்க இரு புறமும் முயல்வது மிக செறிவாக இருந்தது. இளைய யாதவர் மீண்டும் மீண்டும் சமாதானத்திற்க்கு செல்வது.. துரியோதனன் நட்பில் இளைய யாதவருக்கு மணிமுடியும் தர தயாராக இருக்க - பாண்டவர்களுக்கு ஊசி முனை இடமுமில்லை - என்பது அற்புத நாடகத் தருணமாக உணர்ந்தேன்.

வேத சொற்களின் சுருக்கம், அற்புத உவமைகள். தனியாக ஒரு பட்டியல். பிறகு அனுப்புகிறேன்.

வடிவில் வித்தியாசமாக இமைக்கணம் - கர்ணனில் தொடங்கி , பீஷ்மர், விதுரர் வழியாக இப்போது வியாசரும் வருகிறார். எதிர்காலமும் தெரிந்தால் முடிவு மாறுமா? சற்று last temptation  of  jesus christ  நினைவிற்கு வந்தது. stranger than fiction என்கிற திரைப்படத்தில் எழுத்தாளரின் பாத்திரம், எழுத்தாளரை வந்து சந்திக்கும்.அதுவும் நினைவிற்கு வந்தது. இளைய யாதவர் செய்வது அனைத்தும் virtual reality  போலும் தோன்றுகிறது.

வெண்முரசின் முடிவில், நமக்கென ஒரு முழுமையான இந்தியத்  தொன்ம அகராதி தொகுதி நமக்கு கிடைக்கும் என தோன்றுகிறது.

அன்புடன் 

முரளி 

அன்புள்ள முரளி

உண்மையில் எனக்கு இது வேண்டியிருக்கிறது. அக்கையெழுத்துக்களைப் போடும்போது என்னுடன் என் வாசகர்களின் நிரை ஒன்று இருப்பதை உணர்கிறேன். எள்ளல்களும் அசட்டுவிமர்சனங்களும் முழுமையான உதாசீனமும் மட்டுமே இங்கே அறிவுச்சூழலிலிருந்து வந்துகொண்டிருக்கின்றன.  வேறெவ்வகையிலும் அது அமையாது என நானும் அறிவேன். ஆகவே தனிமையிலல்ல வீணல்ல என்னும் உணர்வை அடைகிறேன். இந்த பெரும்பணியில் உண்மையான ஊக்கமென தமிழகத்திலிருந்து எனக்குக் கிடைப்பது இந்த ஒரு  வாசகர் வட்டம் மட்டுமே. இவர்களுக்கு  நான் தனிப்பட்டமுறையில் கடன்பட்டிருக்கிறேன்

ஜெ